

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
வேல்ராஜ், தனுஷ் இணைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'வேலையில்லா பட்டதாரி'. அதே படக்குழு மீண்டும் இணைந்து படம் பண்ண தீர்மானித்தார்கள். இப்படம் 'வேலையில்லா பட்டதாரி 2' அல்ல என்று படக்குழு அறிவித்தது.
தனுஷ் உடன் சமந்தா, ஏமி ஜாக்சன், சதீஷ்,ராதிகா, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. சில காட்சிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற காட்சிகளை வைத்து இறுதிகட்டப் பணிகளும் துவங்கப்பட்டது.
பிரபுசாலமன் படத்தில் கவனம் செலுத்திவந்த தனுஷ், அப்படத்தில் தன் காட்சிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வந்த படத்தின் மீதம் இருந்த காட்சிகளை தனுஷ், சமந்தா இருவரும் இணைந்து முடித்துக் கொடுத்துவிட்டார்கள்.
"வேல்ராஜ் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும்" என்று சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.