

'நானும் ரவுடிதான்' மற்றும் '10 எண்றதுக்குள்ள' ஆகிய இரண்டு படங்களின் வசூல் நிலவர சர்ச்சைக்கு இரண்டு படக்குழுவினரும் விளக்கம் அளித்திருக்கிறார்கள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருக்கும் 'நானும் ரவுடிதான்' மற்றும் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்திருக்கும் '10 எண்றதுக்குள்ள' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அக்டோபர் 21ம் தேதி வெளியாகின.
அக்டோபர் 22ம் தேதி '10 எண்றதுக்குள்ள' படத்தை வெளியிட்டிருக்கும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், முதல் நாளில் 6.5 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தனுஷ், "’நானும் ரவுடிதான் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வசூலும் அதிகரிக்கும்" என்று தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக 2.16 கோடி வசூல் என ஏரியா வாரியாக வசூலையும் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார் தனுஷ்.
இந்நிலையில், பல்வேறு சமூக வலைத்தளங்களில் '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் 2.92 கோடி தான் வசூல் செய்திருக்கிறது என தகவல்களை வெளியிட்டார்கள். அதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இடம்பெறுவது போன்று ரீ-ட்வீட் செய்தார். இதனால் இரண்டு படங்களின் வசூலிலும் சர்ச்சை நிலவியது.
இதனைத் தொடர்ந்து '10 எண்றதுக்குள்ள' படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் "இணையங்களில் வசூல் நிலவரம் குறித்து கருத்துகள் வெளியாகி இருக்கின்றன. வசூல் விவரம் குறித்து சினிமா வர்த்தகர்கள் மற்றும் திரையரங்குகளில் விசாரித்துவிட்டு கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். படத்தில் இடம்பெற்று இருக்கும் நிறுவனம் மிகவும் பிரசித்திப் பெற்றது. நாங்கள் எங்களது வசூலில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
ட்விட்டர் தளத்தில் தனுஷ் தனது ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது விக்ரம் ரசிகர்கள் இச்சர்ச்சை குறித்து தனுஷிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தனுஷ், "எனது ட்வீட்களைப் பார்த்து அந்த ட்வீட்டை நீக்கி விட்டேன். எனது எண்ணம் 'நானும் ரவுடிதான்' வசூலை ட்வீட் செய்வதில் தான் இருந்தது. தவறுதலாக பண்ணிவிட்டேன்" என்று தெரிவித்தார்.
இவ்விரண்டு தரப்பின் விளக்கங்களைத் தொடர்ந்து இரண்டு படங்களின் வசூல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.