

'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
'சைக்கோ' படத்தைத் தொடர்ந்து 'பிசாசு 2' படத்தின் முதற்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அவருடைய பிறந்த நாளன்று, இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார். பூர்ணா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் டிசம்பர் 14-ம் தேதி தொடங்கப்பட்டது.
முதற்கட்டப் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஏலகிரியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. ஜனவரியில் தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
'பிசாசு 2' படத்தின் இசையமைப்பாளராக கார்த்திக் ராஜா பணிபுரிந்து வருகிறார். தற்போது இரண்டு பாடல் பணிகளை முடித்துவிட்டார் மிஷ்கின். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். லண்டனைச் சேர்ந்த சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார்.
'பிசாசு 2' படத்தை முடித்துவிட்டு, சிம்பு நடிக்கவுள்ள படத்தை மிஷ்கின் இயக்குவார் எனத் தெரிகிறது.