கமல் படத்தை இயக்கவில்லை: ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம்

கமல் படத்தை இயக்கவில்லை: ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம்
Updated on
1 min read

கமல் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருப்பதற்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. ஜெயகுமார் தயாரித்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது அப்பாவுடன் ஆதிக் ரவிச்சந்திரன், கமலைச் சந்தித்து ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து கமலின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாகவும், அதனால் தான் சந்தித்தாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இச்செய்தி தொடர்பாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் வெற்றி பெற்றதற்காக எனக்கும் என் தந்தைக்கும் ரோல் மாடலாக இருக்கும் கமல்ஹாசனின் ஆசி பெற அணுகிய போது பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டு எங்களை சந்தித்தார்.

அவருடன் மகழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த போது எங்கள் வாழ்நாளில் ஒரு பெரிய கனவு நனவானதாகவே உணர்ந்தேன். நேரம் கிடைக்கும் போது 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் பார்க்கும்படி கோரிக்கை வைத்த போது பெருந்தன்மையுடன் பரிசீலிப்பதாக கூறினார்.

இந்நிலையில் இன்று ஒரு நாளிதழில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், படத்தை பற்றிய காட்சிகள் பற்றி அவரிடம் விவரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது முற்றிலும் தவறான செய்தியாகும். சினிமா வாழ்வில் ஆரம்பகட்டதில் இருக்கும் எனக்கு இச்செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. இந்தச் செய்தியால் அவர் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in