

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் பங்கேற்ற விஜய் சேதுபதியை படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் வரவேற்று குறிப்பு அனுப்பியுள்ளார்.
'நானும் ரவுடிதான்' படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன.
விஜய் சேதுபதியுடன் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வந்தது. கரோனா அச்சுறுத்தலால் அனைத்துப் பணிகளுமே நிறுத்தப்பட்டன. கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க ஹைதராபாத் வருகை தந்திருந்த விஜய் சேதுபதியை வரவேற்று, பிறந்தநாளுக்கு வெட்டுவதைப் போன்ற ஒரு கேக்கும், வரவேற்புக் குறிப்பு ஒன்றையும் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியின் அறைக்கே அனுப்பியுள்ளார். இதில்,
எங்கள் அன்பான மக்கள் செல்வனுக்கு, எங்களது இரண்டாவது திரைப்படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்புக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இம்முறை படத்தை தயாரித்தும் இருப்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைத்துள்ளது. நீங்கள் இங்கே இருப்பது என் கௌரவம் என்பதை ரவுடி பிக்சர்ஸின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கு அற்புதமான அனுபவம் தருவோம் என்பதை உறுதியுடன் சொல்லிக் கொள்கிறேன். மறக்க முடியாத ஒரு திரைப்படத்தை நாம் உருவாக்குவோம். எப்போதும் போல உங்கள் மந்திரத்தைத் தூவுங்கள்.
அன்புடன்
விக்னேஷ் சிவன்
என்று எழுதப்பட்டுள்ளது. இதைக் காணொலியாக எடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகுதியில் பகிர்ந்துள்ளார். மேலும் விக்னேஷும் விஜய் சேதுபதியும் பூச்செண்டை தூக்கிப் போட்டு மாற்றிக் கொள்ளும் காணொலி ஒன்றையும் விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். .