

ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பாக, நந்தினி கடும் கோபத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்த கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சித்ராவின் மரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் சித்ராவுடன் நடித்து வந்த 'மைனா' நந்தினி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் கூறியிருப்பதாவது:
"ஊடகங்கள் என்றாலே இப்படித்தான். ஏன் இப்படி ஒரு கருத்து? இந்தத் தேவையில்லாத குற்றச்சாட்டை நிறுத்த வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரது தொழிலை வைத்து அவரது குணத்தைப் பற்றித் தீர்மானிக்காதீர்கள், அனுமானிக்காதீர்கள். மனிதர்களை மதியுங்கள். மனிதர்களாய் இருங்கள்.
மன அழுத்தம், மன வேதனையெல்லாம் ஊடகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே வரும் என்றில்லை. பெரும்பாலானவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் வலி, போராட்டங்கள், அழுத்தங்கள் உள்ளன.
ஒருவரது தாகம், தொழிலை வைத்து அவரைக் காயப்படுத்தாதீர்கள். அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், சமூகத்தில் சொல்லப்படும் விஷயங்களை நம்பி அனுமானம் செய்துகொண்டு ஒரு நபரைக் கொல்ல வேண்டாம்.
உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் புறக்கணியுங்கள். அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழவிடுங்கள்".
இவ்வாறு நந்தினி தெரிவித்துள்ளார்.