

'மாஸ்டர்' படத்துக்கு முன்னுரிமை என்பது முடிவாகிவிட்டாலும், பொங்கல் வெளியீடு என்பதில் 'ஈஸ்வரன்' படக்குழுவும் உறுதியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் உரிமையை லலித் குமார் கைப்பற்றியுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. பொங்கல் வெளியீட்டில் உறுதியாகியுள்ளது.
ஓடிடி வெளியீட்டுக்கு முன்னுரிமை அளிக்காமல், திரையரங்க வெளியீட்டில் 'மாஸ்டர்' உறுதியாகியுள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பொங்கல் வெளியீட்டில், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளை 'மாஸ்டர்' படத்துக்கு ஒதுக்கச் சம்மதம் தெரிவித்துள்ளனர். பெரும் முதலீடு, காத்திருப்பு உள்ளிட்டவைக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த முடிவால், முன்னதாகத் திட்டமிடப்பட்ட 'சுல்தான்', 'ஈஸ்வரன்' உள்ளிட்ட சில படங்கள் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், 'ஈஸ்வரன்' படக்குழுவினரோ பொங்கல் வெளியீட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
ஏனென்றால், தற்போதே படத்தை விளம்பரப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். நாளை (டிசம்பர் 14) 'ஈஸ்வரன்' படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தின் ஆல்பம் வெளியீடு, ட்ரெய்லர் எனத் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தவுள்ளது படக்குழு.
இதுகுறித்து விசாரித்த போது, ஜனவரி 13-ம் தேதிதான் 'மாஸ்டர்' வெளியாகவுள்ளது. அன்றைய தினம் அல்லாமல் ஜனவரி 15-ம் தேதி 'ஈஸ்வரன்' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.