இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் என் கனவு: ஜெய்

இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் என் கனவு: ஜெய்
Updated on
1 min read

இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் எனது கனவு என்று ஜெய் தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்துக்கு முன்பாக, ஜெய் நடித்துள்ள 2 படங்களை இயக்கி முடித்துள்ளார் சுசீந்திரன். இதில் ஒரு படத்தை எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

'ஷிவ ஷிவா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் ஜெய்யுடன் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் ஜெய். மேலும், இந்தப் படத்துக்காகத் தனது உடலமைப்பையும் மாற்றி நடித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய் கூறியிருப்பதாவது:

"கமல் சார் 'மருதநாயகம்' படத்துக்காக உடலை மாற்றியதுபோல நான் என் உடலமைப்பை மாற்றவில்லை. நான் செய்ததெல்லாம் ஒல்லியாகத் தெரிய, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினேன். முதல் முறையாக திரையில் வேட்டி கட்டியதும் இந்தப் படத்துக்காகத்தான். நன்றாக இருந்தது.

எனது சிறு வயதில் பல நாட்களை நான் ஒலிப்பதிவுக் கூடத்தில் செலவிட்டிருக்கிறேன் (இசையமைப்பாளர் தேவாவின் உறவினர் ஜெய்). 'அண்ணாமலை', 'பாட்ஷா' ஒலிப்பதிவின்போது நான் அங்கு இருந்திருக்கிறேன். நடிக்க வரவில்லையென்றால் இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் என் கனவு. ஊரடங்குக்கு நன்றி. எனக்குள் இருந்த இசைக் கலைஞனை அது வெளிக்கொணர்ந்துவிட்டது".

இவ்வாறு ஜெய் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in