கார்த்திக் நீக்கம்: ஜீ தமிழ் அறிவிப்பால் ’செம்பருத்தி’ ரசிகர்கள் அதிர்ச்சி

கார்த்திக் நீக்கம்: ஜீ தமிழ் அறிவிப்பால் ’செம்பருத்தி’ ரசிகர்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

'செம்பருத்தி' தொடரிலிருந்து கார்த்திக் நீக்கப்பட்டுள்ளதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு தொடங்கி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'செம்பருத்தி'. இந்தத் தொடர் மிகவும் பிரபலம். இதில் கார்த்திக் ராஜ், ஷாபனா, ப்ரியா ராமன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது ஒளிபரப்பாகி வரும் பகுதிகளை எம்.சங்கர் இயக்கி வருகிறார்.

இந்தத் தொடரிலிருந்து கார்த்திக் ராஜ் விலகிவிட்டதாக, சில நாட்களாகத் தகவல் பரவி வந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும், சமீபத்தில்தான் இந்தத் தொடரிலிருந்து ஜனனி நீக்கப்பட்டு இருந்தார். ஆகையால், கார்த்திக் ராஜ் விலகல் என்பது வதந்தியாக இருக்கும் எனப் பலரும் கருதினார்கள்.

தற்போது, 'செம்பருத்தி' தொடரிலிருந்து கார்த்திக் ராஜ் நீக்கப்படுவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அன்பார்ந்த பார்வையாளர்களே, எங்கள் நிகழ்ச்சிக்குப் பிரம்மாண்ட வெற்றியைத் தேடித் தந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் தொடர் ஆதரவுக்கு ஜீ தமிழ் சேனல் தரப்பு நன்றி கூறிக்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது.

’செம்பருத்தி’ தொடரின் வெற்றிக்குப் பெரிய அளவில் பங்காற்றிய கார்த்திக் ராஜின் அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுகிறோம். கார்த்திக் ராஜுடன் பணியாற்றியதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. இருந்தாலும் எதிர்பாராத சில காரணங்களால் அவருக்குப் பதிலாக வேறொருவர் தொடரில் நடிக்கவிருக்கிறார்.

ஜீ தமிழ் மற்றும் ஜீ5 உடனான அவரது பணி எதிர்காலத்திலும் தொடரும். அவரது தொழில் வாழ்க்கையில் வெற்றியும், நல் அதிர்ஷ்டமும் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் அவரை வாழ்த்துகிறோம்".

இவ்வாறு ஜீ தமிழ் தெரிவித்துள்ளது.

கார்த்திக் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பால், 'செம்பருத்தி' தொடரின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால், அவர்தான் நாயகனாக நடித்து வந்தார். தற்போது அவருக்குப் பதிலாக யார் நடிக்க இருப்பது என்பது விரைவில் தெரியவரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in