

நோலன் திரைப்படத்தைப் பார்க்கும்போது ‘கரகாட்டக்காரன்’ வாழைப்பழ காமெடி நினைவுக்க வந்ததாக ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் பதிவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெனெட்’. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கரோனா நெருக்கடியால் ரிலீஸ் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் சில நாடுகளில் மட்டும் வெளியானது. தற்போது இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ‘டெனெட்’ வெளியானது.
படத்தின் திரைக்கதை மற்ற நோலன் படங்களைக் காட்டிலும் மிகவும் குழப்பமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. வழக்கமாக, நோலன் திரைப்படங்களை ஒருமுறை பார்த்தாலே புரியாது. ஆனால், இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் புரியாது என்ற ரீதியில் பலரும் விமர்சித்தனர். ஆனாலும் படம் வெளியான நாடுகள் அனைத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டெனெட்’ படத்தைக் கலாய்த்துப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''ரொம்ப நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் ‘டெனெட்’ திரைப்படம் பார்த்தோம்.. கரகாட்டக்காரன் திரைப்படத்தின் வாழைப்பழ காமெடிதான் நினைவிற்கு வந்தது''.
இவ்வாறு நட்ராஜ் கூறியுள்ளார்.
நட்ராஜின் இந்தப் பதிவுக்கு அவரது முந்தைய படங்களை வைத்து நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.