

தனது முதல் தயாரிப்பான 'குற்றமே தண்டனை' திரைப்படம் இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்வாகி இருப்பதால் வித்தார்த் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
'காக்கா முட்டை' படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'குற்றமே தண்டனை'. வித்தார்த், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜா பின்னணி இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பாடல்கள் கிடையாது. நாயகனாக நடித்தது மட்டுமன்றி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் வித்தார்த்.
நீண்ட நாட்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், இறுதிகட்ட பணிகள், இளையராஜா பின்னணி இசை பணிகள் ஆகியவை நடைபெற்று வந்தன. இன்னும் இரண்டு நாட்களில் இப்படத்தின் முதல் பிரதி தயாராக இருக்கிறது.
மும்பை மற்றும் கேரளா ஆகிய இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட 'குற்றமே தண்டனை' தேர்வாகி இருக்கிறது. முதல் தயாரிப்பே இதற்கு தேர்வாகி இருப்பதில் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்தார்த்.
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது குறித்து கேட்ட போது, "இதற்கு முழுக்க முழுக்க காரணம் இயக்குநர் மணிகண்டன் தான். நான் அல்ல. இப்படத்தின் கதையை கேட்ட போதே, இது ஒரு வேறு களத்தில் இருக்கிறது என்று சந்தோஷப்பட்டு தயாரித்தேன். படப்பிடிப்பு முடிந்தவுடன் பார்த்த போது, கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருந்தார் இயக்குநர். முதல் தயாரிப்புக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்றார் வித்தார்த்