சித்ரா தற்கொலை; மர்மம் இருப்பதாக தந்தை புகார்: நடந்தது என்ன?

சித்ரா தற்கொலை; மர்மம் இருப்பதாக தந்தை புகார்: நடந்தது என்ன?

Published on

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

2018-ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்குத் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. சமூக வலைதளத்தில் சித்ரா ஆர்மி, முல்லை ஆர்மி என்று பல ரசிகர் பக்கங்கள் இருக்கின்றன.

இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் பதிவுத் திருமணமும் செய்து கொண்டனர். விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், சித்ரா தற்கொலை செய்துகொண்டார். அவருடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

நடந்தது என்ன?

நேற்று (டிசம்பர் 8) 'பாண்டியன் ஸ்டோர்' படப்பிடிப்பில் சித்ரா கலந்து கொண்டார். திருவான்மியூரிலிருந்து தினமும் படப்பிடிப்புக்குச் சென்றுவர முடியாத காரணத்தால், பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அவருடன் கணவர் ஹேமநாத்தும் தங்கியிருந்தார். அதிகாலை 2:30 மணிக்குப் படப்பிடிப்பு முடித்து ஹோட்டல் அறைக்குத் திரும்பினார் சித்ரா.

அப்போது கணவர் ஹேமநாத்திடம் குளிக்கச் செல்வதாகக் கூறி வெளியே செல்லச் சொல்லியிருக்கிறார் சித்ரா. சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டியிருக்கிறார் ஹேமநாத். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் ஹோட்டர் ஊழியரிடம் அறையின் இன்னொரு சாவியை வாங்கி கதவைத் திறந்தனர். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கு மாட்டி, சித்ரா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

உடனடியாக ஹோட்டல் ஊழியர்களுடன் சேர்ந்து சித்ராவின் உடலைக் கீழே இறக்கி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த நசரத்பேட்டை காவல்துறையினர் சித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சித்ராவின் தந்தை புகார்

சித்ராவின் கணவர் ஹேமநாத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், நேற்று படப்பிடிப்பில் சித்ராவுடன் நடித்தவர்களுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, சித்ராவின் தந்தையும் நசரத்பேட்டை காவல்துறையினரிடம் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், ஹேமநாத் - சித்ரா இருவருமே பதிவுத் திருமணம் செய்துள்ளனர். இதனால் ஆர்.டி.ஓ விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in