

இரண்டு நாயகர்களை வைத்து மணிரத்னம் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார்த்தி மற்றும் துல்கர் சல்மான் இருவரையும் வைத்து பழிவாங்கல் கதை ஒன்றை படமாக்க திட்டமிட்டார் மணிரத்னம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராக இருந்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் மும்முரமாக இருந்தார் மணிரத்னம்.
இந்நிலையில், தெலுங்கில் இப்படத்துக்கு இணை தயாரிப்பாளராக ஒருவரை இணைக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, மலையாளத்தில் பல்வேறு படங்கள் ஒப்புக் கொண்டதால் இப்படத்தில் இருந்து விலகினார் துல்கர். அதனைத் தொடர்ந்து அவர் வேடத்துக்கு நானி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 'தோழா', 'காஷ்மோரா' ஆகிய படங்களின் படப்பிடிப்பு இருப்பதால் தேதிகள் குளறுபடி காரணமாக இப்படத்தில் இருந்து விலகினார் கார்த்தி. இதனைத் தொடர்ந்து கார்த்தி வேடத்தில் பகத் ஃபாசில் நடிப்பார் என செய்திகள் வெளியாகின. நாயகியாக நடிக்கவிருந்த கீர்த்தி சுரேஷும் விலகினார்.
இவ்வாறு பல குளறுபடிகள் நிலவுவதால், தற்போதைக்கு இப்படம் வேண்டாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் மணிரத்னம். அதற்கு பதிலாக இளம் நாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவரை வைத்து வேறு ஒரு கதையை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இளம் நாயகன் படத்தை முடித்துவிட்டு, அதற்குப் பிறகு பழிவாங்கல் கதையை படமாக்கலாம் என மணிரத்னம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.