

விஷால் ஆதரவு நடிகர்களின் வாக்குகளை போலி கையெழுத்து மூலம் தங்களுக்கு சாதகமாக்கி தபால் ஓட்டுப் போட சரத்குமார் அணி திட்டமிட்டு வருவதாக திருச்சி போலீஸில் புகார் செய்யப் பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தலில் சரத்குமார், விஷால் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் திருச்சி, புதுகை, மதுரை, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாடகக் கலைஞர்களின் வாக்குகளைப் பெற இரு தரப்பினரும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த துணை நடிகர்கள் எஸ்.பி.பாபு, சரவணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் நேற்று கோட்டை காவல் நிலையத்தில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் நாங்கள் விஷால் தரப்புக்கு ஆதரவாக உள்ளோம். மாவட்டத் தலைவர் காத்தான், பொதுச் செயலாளர் முகமது மஸ்தான், பொருளாளர் கண்ணன் ஆகியோர் சரத்குமார் அணிக்கு சாதகமாகப் பேசி வருகின்றனர். எங்களின் அடையாள அட்டையை மாவட்ட சங்கம் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பது வழக்கம். இந்தாண்டு புதுப்பித்தலுக்காக கொடுத்த அடையாள அட்டைகளை இதுவரை சங்க நிர்வாகிகள் திருப்பித் தரவில்லை.
இதற்கிடையே, நடிகர் சங்கத் தேர்தலில் நேரடியாக சென்னைக்குச் சென்று ஓட்டுப்போட திட்டமிட்டு, இதற்கான கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், எங்களது பெயரில் தபால் ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்து, ஏற்கெனவே அங்கு மற்றொரு கடிதம் வந்திருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், எங்களின் அடை யாள அட்டைகளைப் பயன்படுத்தி, போலியாக கையெழுத்திட்டு தங்க ளுக்குச் சாதகமாக தபால் ஓட்டுப் போட சரத்குமார் தரப்பினர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, காவல் துறையினர் தலையிட்டு எங்களது அடையாள அட்டைகளை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப் பிடப்பட்டிருந்தது.
இந்த புகார் குறித்து கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.