உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றியவர் ஜெயலலிதா: கங்கணா ரணாவத் புகழாரம்

உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றியவர் ஜெயலலிதா: கங்கணா ரணாவத் புகழாரம்
Updated on
1 min read

கங்கணா ரணாவத் நடித்து வரும் 'தலைவி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016, டிச. 5-ம் தேதி காலமானார். அவரது 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு அதிமுக கட்சியினர் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வரும் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு, 'தலைவி' படத்தின் சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கங்கணா ரணாவத் கூறியிருப்பதாவது:

"ஜெயா அம்மாவின் நினைவு தினத்தில், 'தலைவி' படத்திலிருந்து சில புகைப்படங்களைப் பகிர்கிறேன். எனது குழுவுக்குத் தான் அனைத்து நன்றிகளும். குறிப்பாக எங்கள் குழுவின் தலைவர், விஜய்க்கு நன்றி. படத்தை முடிக்க அதிசய மனிதரைப் போல பணியாற்றிக் கொண்டிருக்கிறார். (வேலை முடிய) இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது"

இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

மேலும், படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டு, "உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த பெருமைபடுகிறேன். பெண்மையைப் போற்றுவோம்." என்று குறிப்பிட்டுள்ளார் கங்கணா ரணாவத்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in