'சிம்மராசி' இயக்குநர் ஈரோடு செளந்தர் காலமானார்

'சிம்மராசி' இயக்குநர் ஈரோடு செளந்தர் காலமானார்
Updated on
1 min read

'சிம்மராசி' படத்தின் இயக்குநர் ஈரோடு செளந்தர் காலமானார். அவருக்கு வயது 63

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான கே.எஸ்.ரவிகுமாருக்கு நெருங்கிய நண்பராக வலம் வந்தவர் ஈரோடு செளந்தர். 'சேரன் பாண்டியன்', 'நாட்டாமை', 'முதல் சீதனம்', 'சிம்மராசி', 'பெரிய கவுண்டர் பொண்ணு', 'இளவரசன்', 'கண்ணுபடப் போகுதய்யா', 'சமுத்திரம்' உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.

மேலும், 'முதல் சீதனம்', 'சிம்மராசி' மற்றும் 'ஐயா உள்ளேன் ஐயா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்த 'சிம்மராசி' திரைப்படம் மிகவும் பிரபலம். 'லிங்கா', 'தசவதாரம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான படங்களில் நடித்த நடிகர்கள் அனைவருக்குமே ஈரோடு செளந்தர் மிகவும் பரிச்சயமானவர்.

கடந்த 8 ஆண்டுகளாக ஈரோடு செளந்தருக்கு கிட்னி பிரச்சினை இருந்துள்ளது. ஆகையால் தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்து வந்தார். நேற்று (டிசம்பர் 4) டயாலிசிஸ் செய்வதற்காக மருத்துவமனை சென்றிருக்கிறார் ஈரோடு செளந்தர். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 5) மதியம் 1:35 மணியளவில் காலமானார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், கலையரசி மற்றும் காயத்ரி ஆகிய மகள்கள் இருக்கிறார்கள். இருவருக்குமே திருமணமாகிவிட்டது.

ஈரோடு செளந்தரின் மறைவுக்கு அவருடைய நண்பர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவருடைய உடல் நாளை (டிசம்பர் 6) பள்ளிபாளையத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in