

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் த்ரிஷா.
'தங்கமகன்', பிரபுசாலமன் இயக்கும் படம் ஆகியவற்றைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் தனுஷ். தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கும் இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடிக்க முதலில் வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், தேதிகள் பிரச்சினை காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார் வித்யா பாலன். தனுஷுக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் வித்யாபாலன் நடிக்கவிருந்த வேடத்தில் நடிக்க தற்போது த்ரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். தனுஷ் - த்ரிஷா இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தனுஷுக்கு அப்பாவாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் ஒப்பந்தமாகி விடுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.