

அஜித் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் இசையை அனிருத் பிறந்த நாளான அக்டோபர் 16ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவடையும் தருவாயில் இருக்கிறது. ஏற்கனவே படத்தின் முதல் பாதி பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு விட்டது. தற்போது இரண்டாம் பாதி பணிகளை விரைவில் முடிக்கவிருக்கிறார்கள். செப்டம்பர் 23ம் தேதி இரவு இப்படத்துக்கு 'வேதாளம்' என்று தலைப்பிடப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்து, பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் 16ம் தேதி இசையமைப்பாளர் அனிருத் பிறந்த நாள் அன்று படத்தின் இசை வெளியாக இருக்கிறது. இதனை, இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.