எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் சகோதரா: நடராஜனுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் சகோதரா: நடராஜனுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து
Updated on
1 min read

எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் சகோதரா என்று நடராஜனுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கெனவே தோற்று தொடரை இழந்துவிட்ட நிலையில், இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.

இந்தப் போட்டியில் எதிர்பார்த்தது போலவே தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றார். அவரது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி என்பதால் ஆட்டம் தொடங்குவதற்கு முன் அணியினர் முன்னிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, அணியின் கேப் வழங்கப்பட்டது. நடராஜனின் ஜெர்ஸியில் 232 என்ற எண் இடம்பெற்றது.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியானதிலிருந்து, நடராஜனுக்கு சமூக வலைதளத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். அதிலும் முதல் விக்கெட்டை வீழ்த்தியபோது, பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். தனது 10 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார் நடராஜன்.

இந்த ஊரடங்கின்போது சிவகார்த்திகேயன் - நடராஜன் - சதீஷ் மூவருமே வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. தற்போது இந்திய அணிக்காக நடராஜன் விளையாடி இருப்பது குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அற்புதமான ஆட்டம் சகோதரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் முதல் ஆட்டம். நன்றாக ஆடினீர்கள். இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையில் உங்களைப் பார்த்தது சந்தோஷமாக இருந்தது. எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் சகோதரா".

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in