

அக்ஷய் குமாரின் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துர்காமதி: தி மித்’. நாயகியை மையமாகக் கொண்ட இப்படத்தில் பூமி பெட்னேகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.அஷோக் இயக்கியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி அன்று ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.
இப்படம் குறித்து பூமி பெட்னேகர் கூறியுள்ளதாவது:
‘அனைத்து வகையான திரைப்படங்களில் நடிக்க வேண்டும், ஒவ்வொரு திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஒரு நடிகையாக இதுவே என் குறிக்கோள். பலவகையான நடிப்புத் திறன்களை என்னிடமிருந்து வெளிக்கொண்டு வரும் சிறந்த திரைப்படங்களில் நான் இருக்க விரும்புகிறேன். ‘துர்காமதி’ அப்படியான ஒரு படம் என்று கருதுகிறேன்.
ஒரு நடிகையாக இப்படம் என்னை வலுப்படுத்தும் என்று எனக்கு தோன்றியது. நிச்சயமாக இது எனக்கு ஒரு மிகப்பெரும் அனுபவம். திகில் படம் எடுப்பது மிகவும் கடினம். ஏனெனில் தாங்கள் பார்ப்பது உண்மையல்ல என்று நம்பும் பார்வையாளர்களை நாம் திருப்திபடுத்த வேண்டும். எனவே இந்த அனுபவம் எனக்கு வேண்டும் என்று நான் விரும்பினேன்.
இவ்வாறு பூமி பெட்னேகர் கூறினார்.