

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி அதன் மூலம் வருவாயைப் பெருக்கி நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதே எங்களின் நோக்கம் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் சரத்குமார், விஷால் அணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சரத்குமார் தலைமையிலான அணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நடிகர்கள் சரத்குமார், சிம்பு, ராதாரவி, விஜயகுமார், எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், நடிகை ராதிகா, நளினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு, மற்றும் இயக் குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சேரன் ஆகியோர் சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
விழாவில் கலந்து கொண்டோர் பேசியதாவது:
நடிகர் சிம்பு:
யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்பதோ, திட்ட வேண்டும் என்பதோ என் எண்ணமில்லை. எல்லோரும் எனக்கு நண்பர்களே. நம் நடிகர் சங்கம் என்கிற குடும்பம் பிரியக் கூடாது என்ற எண்ணத்தில்தான் நான் இந்த அணியில் போட்டியிடுகிறேன்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு:
10 வருஷமாக தேர்தலே நடத்தாமல் சரத்குமார் பதவியில் உள்ளார் என்றால் அவர் நல்லது பண்ணியதால்தானே தலைவராக அவர் நீடிக்கிறார். நடிகர்கள் இடையே பிரிவு ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் தான் நாங்கள் சமரசக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் விஷால் அணியினர் எங்களை அவமதித்து விட்டனர்.
சரத்குமார்:
நடிகர் சங்கத்துக் காக நான் உழைத்த உழைப் புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. என் மீது ஆதார மில்லாமல் குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். மூத்த கலைஞர்கள் பலரால் கட்டப்பட்ட நடிகர் சங்கக் கட்டிடத்தை நவீனப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று முயற்சி எடுத்தோம். இதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தோம்.
மாற்றம் வேண்டும் என்று கூறுகிறீர்களே. என்ன மாற்றம் செய்யப் போகிறீர்கள்? நவீன கட்டிடம் கட்டி அதன் மூலம் வருவாயைப் பெருக்க முயல்வதே மாற்றம். அதைத்தான் நாங்கள் முன்னெடுக்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரை மாற்றம் என்பது புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றி நடிகர் சங்கத்தை கடன் இல்லாமல் கொண்டு போவதே. அதற்காகத்தான் போராடுகிறோம். அதில் வெற்றியும் பெறுவோம்.
இந்தத் தேர்தல் மூலம் நண்பர்கள் எதிரிகளாகி விட்டனர். எதிரிகள் துரோகிகளாக மாறியுள்ளனர். இந்த நடிகர் சங்கம் ஒரு குடும்பம் போன்றது. அதைக் கெடுக்க வேண்டாம். எனவே நாம் ஒற்றுமையுடன் இருந்து செயல்படுவோம். எல்லோரும் மனசாட்சியுடன் சிந்தித்துப் பார்த்து ஓட்டு போடுங்கள்.
இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.