

'ராதே ஷ்யாம்' படத்தில் பிரபாஸுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்து வருகிறார்.
ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலுக்குப் பின்பு இத்தாலி நாட்டுக்குச் சென்று சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கிவிட்டுத் திரும்பியுள்ளது படக்குழு. தற்போது ஹைதராபாத்தில் அரங்குகள் அமைத்து சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வருகிறது. இதில் பிரபாஸுடன் நடித்து வருகிறார் ஜெயராம்.
பிரபாஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார் ஜெயராம். தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புடன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.
'ராதே ஷ்யாம்' படத்தை முடித்துவிட்டு, 'மஹாநடி' இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் 'ஆதிபுருஷ்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் பிரபாஸ்.