இசைப் பள்ளிக்கு எஸ்பிபி பெயர்: ஆந்திர அரசு கவுரவம்

இசைப் பள்ளிக்கு எஸ்பிபி பெயர்: ஆந்திர அரசு கவுரவம்
Updated on
1 min read

இசைப் பள்ளிக்கு எஸ்பிபியின் பெயரைச் சூட்டி, ஆந்திர அரசு கவுரவம் செய்துள்ளது.

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், பின்பு உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி காலமானார். செப்டம்பர் 26-ம் தேதி அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எஸ்பிபி மறைவுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது, தாதா சாகேப் பால்கே விருது, அவருடைய பெயரில் தேசிய விருது எனத் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்நிலையில், முதன்முறையாக ஆந்திர அரசின் இசைப் பள்ளிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆந்திராவின் தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மிகாபட்டி கெளதம் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எஸ்பிபி ஒரு தன்னிகரில்லா பாடகராக மதிக்கப்பட்டவர். எனவே, நெல்லூர் அரசு இசை மற்றும் நடனப் பள்ளியின் பெயரை டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடனப் பள்ளி என மாற்ற எங்கள் அரசு முடிவு செய்துள்ளது."

இவ்வாறு மிகாபட்டி கெளதம் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர அரசின் இந்த கவுரவம் எஸ்பிபி குடும்பத்தினர் மற்றும் அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு எஸ்பிபியின் மகன் சரண் தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in