’என்னய்யா ஆம்பளையவே லவ் பண்ணச் சொல்றியே’ என்று ஜெமினி சார் கிண்டல் பண்ணினார்!’ - ‘ஜெமினி கணேசன் 100’ - கே.எஸ்.ரவிக்குமாரின் ‘அவ்வை சண்முகி’ நினைவுகள்

’என்னய்யா ஆம்பளையவே லவ் பண்ணச் சொல்றியே’ என்று ஜெமினி சார் கிண்டல் பண்ணினார்!’ - ‘ஜெமினி கணேசன் 100’ - கே.எஸ்.ரவிக்குமாரின் ‘அவ்வை சண்முகி’ நினைவுகள்
Updated on
2 min read

’என்னய்யா ஆம்பளையவே லவ் பண்ணச் சொல்றியே’ என்று ‘அவ்வை சண்முகி’ படத்தில் நடிக்க அழைத்ததற்கு ஜெமினி கணேசன் சார் கிண்டல் செய்தார்’ என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.

நடிகர் ஜெமினி கணேசனின் 100வது பிறந்தநாளையொட்டி அவரின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ், இணையதள சேனலில் ஜெமினி கணேசன் குறித்து பிரபலங்கள் சொல்லும் பதிவுகளை அனுபவங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்ததாவது:

‘எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் மூவரும் இருந்த காலகட்டம், மறக்கவே முடியாது. சிறுவயதில் ரசித்து ரசித்துப் பார்த்திருக்கிறேன். மும்மூர்த்திகள் என்று சொல்லுவார்கள். ஜெமினி கணேசன் காதல் மன்னன். எம்ஜிஆருக்கு ஒரு ஸ்டைல்; சிவாஜிக்கு ஒரு ஸ்டைல். ஜெமினி கணேசனுக்கென்று ஒரு தனி ஸ்டைல். ’கல்யாண பரிசு’ மாதிரியான எத்தனையோ படங்கள். குறும்புத்தனமான அவரின் சிரிப்புக்காகவே பலமுறை அவர் படங்களைப் பார்த்திருக்கிறேன்.

அப்போதெல்லம் ‘செகண்ட் ரன்’ படங்கள் வரும். இப்போது டி.வி.யில்தான் ‘செகண்ட் ரன்’ படங்களைப் பார்க்கிறோம். ஆனால் அப்போது படங்களை தியேட்டரில் பார்க்கலாம். அப்போது ஸ்கூலெல்லாம் கட் அடித்துவிட்டு படம் பார்த்திருக்கிறேன். ’கல்யாண பரிசு’ படமெல்லாம் பல முறை பார்த்திருக்கிறேன். காதல் உணர்வை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துவார்.

’காதல் இளவரசன்’ கமல் சாருடன் எனக்கு முதல் வாய்ப்பு. ‘அவ்வை சண்முகி’ திரைப்படம் வந்தது. ‘காதல் இளவரசன்’ என்றால் ‘காதல் மன்னன்’ நினைவுக்கு வருவாரே. ‘அவ்வை சண்முகி’யை காதலிப்பவராக யாரை நடிக்க வைக்கலாம் என்ற போது, கடைசியில் முடிவானதுதான் ஜெமினி சார்.

ஜெமினி சாரிடம் கதை சொன்னோம். கதையையெல்லாம் கேட்டுவிட்டு, ‘என்னய்யா, ஒரு ஆம்பளையவே லவ் பண்ண வைக்கிறீங்களேய்யா’ என்று சொன்னார். ’ஆனா, படம் முடியற வரைக்கும் நீங்க ஒரு ஆம்பளையைத்தான் லவ் பண்ணினீங்கன்னு உங்களுக்குத் தெரியாது சார்’ என்று சொன்னோம்.

ஜெமினி சாரை வைத்து ஷாட் வைக்கும் போது, நான் சிரித்துக் கொண்டே இருப்பேன். ‘என்னய்யா சிரிக்கிறே’ என்று கேட்பார் . ’இல்ல சார், உங்களோட பழைய படங்களெல்லாம் ஞாபகத்துக்கு வருது. ‘ஓஹோ எந்தன் பேபி’ பாட்டெல்லாம் நினைவுக்கு வருது சார்’ என்று சொன்னேன். ’அப்படியே குதிச்சு வந்து எண்ட்ரி கொடுப்பீங்களே சார்’ என்றேன். இப்போது பிரபுதேவா இப்படி எண்ட்ரி கொடுப்பார். எத்தனையோ படங்களில் இப்படித்தான் டங்குன்னு குதித்து வந்து எண்ட்ரி கொடுப்பார் ஜெமினி சார். அவ்வளவொரு பிரிஸ்க்கான நடிகர் அவர்.

இப்போது கூட, ‘அவ்வை சண்முகி’யை நினைக்கும் போது அவரை வைத்து படமெடுத்ததும் அவ்வை சண்முகியை அவர் குறும்பாகப் பார்த்ததும் சிரித்ததும் நினைவுக்கு வருகிறது. அதை யாராலுமே பண்ணமுடியாது. ஜெமினி சார், நாகேஷ் சாரெல்லாம் இல்லையென்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது.

இதையடுத்து ‘கொண்டாட்டம்’ என்ற படமும் என்னுடன் செய்தார். அடிக்கடி போனில் பேசுவார். இந்த இரண்டு படங்கள்தான் பழக்கம். மற்றபடி அவரைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் நிறைய உண்டு. அவர் நிறையபேருக்கு உதவிகள் செய்திருக்கிறார். இன்றைக்கும் பலரின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். வாழ்ந்து கொண்டே இருப்பார்.

இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in