

மக்கள் திரையரங்கிற்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒரு சவால்தான் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
ஆர்.டி.எம் இயக்கத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை தனஞ்ஜெயன் கைப்பற்றியுள்ளார். தற்போது அவரோடு கூட்டணியிட்டு வெற்றிமாறன் வழங்குகிறார்.
நவம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று (நவம்பர் 23) சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
இதில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:
"இந்தப் படம் பார்த்தவுடனே, கதாபாத்திரங்களுக்குள் இருந்த பயம், பிரச்சினைகள் ஆகியவற்றுக்குள் என்னால் இருக்க முடிந்தது. மிடில் க்ளாஸ் மக்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலுக்குள் இருக்கிறோம் என்று ரொம்ப வலுவாகச் சொன்ன மாதிரி இருந்தது.
இந்தப் படத்தில் என்னுடைய பெயர் இருப்பது, எனக்கொரு மரியாதையாக இருக்கும் என்றே தோன்றியது. ஒருவருடைய பெயர் இருப்பதால் மட்டுமே மக்கள் படத்தைப் பார்த்துவிடுவார்களா என்று தெரியவில்லை. மக்களுக்குப் படம் பிடித்திருந்தால் பார்ப்பார்கள், பாராட்டுவார்கள் என்பதுதான் எனது எண்ணம். இந்தப் படத்தில் அனைவருமே நன்றாக நடித்திருந்தார்கள்.
இந்த மாதிரியான படங்கள் காவல்துறையின் மீதான விமர்சனம் என்பதைவிட, மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கான இடமாகப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். தொடர்ச்சியாகப் படங்களில் இப்படி வருகிறது என்றால், தினசரி வாழ்க்கையில் பார்ப்பதால்தான் படங்களில் வருகிறது. ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடக்கும் விஷயங்கள் ஏதோ ஒரு இடத்தில் பார்த்ததாகவேதான் இருக்கிறது.
அனைத்து இயக்குநர்களுக்குமே முதல் படம் எப்படியாவது தப்பித்துவிட்டால் போதும் என்றுதான் தோன்றும். அந்தத் தப்பித்தலைக் கூட ரொம்பப் பொறுப்புடன் செய்துள்ளார் இயக்குநர் ஆர்.டி.எம்.
இன்றைய காலகட்டத்தில் தனஞ்ஜெயன் சார் எடுத்திருப்பது ஒரு தைரியமான முடிவு. ஒரு படத்தை இந்தக் காலகட்டத்தில் திரையரங்கிற்கு எடுத்து வருவதற்குத் தைரியம் வேண்டும். மக்கள் திரையரங்கிற்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒரு சவால் தான்".
இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.