

இலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ஒன்றைப் பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இலங்கையின் பிரபல கவிஞர் அஸ்மின் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.
எஸ்.பி.பி மறைவு உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இசை வடிவிலேயே எஸ்.பி.பி.க்குப் புகழாஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தமிழ் இசைக் கலைஞர்கள் இணைந்து எஸ்.பி.பிக்கு ‘’எழுந்து வா இசையே...’’எனத் தொடங்கும் அஞ்சலிப் பாடல் ஒன்றைப் பாடி, காணொலி வடிவில் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பாடலை எழுதிய கவிஞர் அஸ்மின் இது தொடர்பாக ’இந்து தமிழ்’ இணையதளத்திடம் கூறுகையில், ‘‘தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இசையமைப்பாளர் அருண் குமாரசுவாமி இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். கடந்த வாரம் யூடியூப்பில் வெளியிட்ட இந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாடலை இலங்கையின் பிரபலமான பாடகர்களான எம்.சிவகுமார், கே.மகிந்தகுமார், பிரேமானந்த், சுருதி பிரபா, நிலுக்ஸி ஜெயவீரசிங்கம், நித்தியானந்தன், கிருஷ்ணகுமார், கந்தப்பு ஜெயந்தன், கே.சுஜீவா, மடோனா, அருண்குமாரசுவாமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இலங்கையில் ‘பொத்துவில்’ பகுதி எனது பூர்வீகம். ‘பொத்துவில் அஸ்மின்’ என்னும் பெயரில் ‘விடைதேடும் வினாக்கள்’, ‘விடியலின் ராகங்கள்’, ‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்னும் மூன்று கவிதைத் தொகுப்புகளும் வெளியிட்டு இருக்கிறேன். இலங்கையில் அரசு தொலைக்காட்சியான வசந்தத்தில் முதன்மை நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறேன்’’என்றார் கவிஞர் அஸ்மின்.
பாடலைக் காண