

'கோப்ரா' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை டிசம்பரில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த போது, கரோனா அச்சுறுத்தலால் பாதியிலேயே திரும்ப வேண்டிய சூழலுக்குப் படக்குழு தள்ளப்பட்டது.
அதற்குப் பிறகு படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது. சமீபத்தில் விக்ரம் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால், 'கோப்ரா' படப்பிடிப்பை எப்போது தொடங்கலாம் என்ற ஆலோசனையில் இருந்தது படக்குழு. தற்போது டிசம்பர் 2-வது வாரத்திலிருந்து 'கோப்ரா' படத்துக்காக விக்ரம் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
முதலில் ரஷ்யாவில் எடுக்க வேண்டிய இதர காட்சிகளை, சென்னையிலேயே அரங்குகள் அமைத்து படமாக்கத் திட்டமிட்டார்கள். ஆனால், அதன் கிராபிக்ஸுக்கு அதிக செலவு மட்டுமன்றி, நம்பகத்தன்மை இருக்காது என்பதால் ரஷ்யாவுக்கு பயணிக்கப் படக்குழு முடிவு செய்துவிட்டது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஜனவரிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.