

நடிகர் சங்கத் தேர்தலின் போது நடிகர் விஷால் தாக்கப்பட்டதாகவும், அவரது இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பல முன்னணி நடிகர்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலில் முறைகேடு நடப்பதாக விஷால் அணியினர் குற்றம்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து விஷால் அணிக்கும், சரத்குமார் அணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் எதிரணியினர் விஷாலை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விஷாலின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்து விழுந்த விஷாலை தண்ணீர் தெளித்து எழுப்பினர்.
விஷால் அணியினருக்கும், சரத்குமார் அணியினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு வெளியே விஷால் அழைத்துவரப்பட்டார்.
விஷாலைத் தாக்கியவரைக் கைது செய்ய வேண்டும் என்று நடிகர் சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விஷால் பேசுகையில், ''தேர்தல் முடிந்த பிறகே எதையும் பேச உள்ளேன். என்ன அடித்தாலும் தேர்தல் தொடரும். நடிகர் அல்லாத ஒருவர் தாக்க முயன்றார்'' என்றார் விஷால்.