நடிகர் சிவகார்த்திகேயனின் உதவியால் மருத்துவம் பயிலும் கனவு நனவானது: உள் ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைத்த மாணவி நெகிழ்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயனின் உதவியால் மருத்துவம் பயிலும் கனவு நனவானது: உள் ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைத்த மாணவி நெகிழ்ச்சி
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த டெய்லர் கணேசன்- சித்ரா ஆகியோரின் மகள் சஹானா(18). பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600-க்கு 524 மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்.

கஜா புயலால் சேதமடைந்த வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில் தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்த இவர், மருத்துவராக வேண்டும் என்ற உறுதியுடன் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார்.

இம்மாணவியின் நிலை குறித்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியான செய்தியைத் தொடர்ந்து, அப்போதைய தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டுக்கு தனது சொந்த செலவில் 2 சோலார் விளக்குகளை அமைத்துக் கொடுத்ததுடன், புத்தகங்கள் வாங்கிக்கொள்ள ரூ.10 ஆயிரம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அதே ஊரைச் சேர்ந்த கவுதமன் என்பவர் நீட் தேர்வுக்கு தயாராக உதவி செய்து வந்தார்.

இந்நிலையில், மாணவி சஹானாவின் நிலையை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவை தஞ்சாவூரில் உள்ள தனியார் நீட் பயற்சி மையத்தில் சேர்த்து, கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற உதவி செய்தார்.

இந்நிலையில், நடந்து முடிந்து நீட் தேர்வில் 273 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்து, நேற்று சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து சஹானா கூறிய தாவது: எனது மருத்துவர் கனவுக்கு பலரும் உயிர் கொடுத்தனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் மருத்துவர் கனவு நனவாகியுள்ளது. மேலும், எனது படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு பெற்றுத் தந்த தமிழக முதல்வரால் எனது மருத்துவர் கனவு நிறைவேறுவது இந்த ஆண்டே உறுதியானது. அதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in