பிராந்திய மொழியில் பாடுவதுதான் தர்மம்: மல்லாடி சகோதரர்கள் நேர்காணல்

பிராந்திய மொழியில் பாடுவதுதான் தர்மம்: மல்லாடி சகோதரர்கள் நேர்காணல்
Updated on
1 min read

சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்பிரமணியம், அருணா சாய்ராம், பாம்பே ஜெய ராம்நாத், டி.எம். கிருஷ்ணா இவர்களின் வரிசையில் மல்லாடி சகோதரர்களும் (ராம் பிரசாத், ரவிக்குமார்) இணைகிறார்கள். கர்னாடக இசைத் துறையில் மல்லாடி சகோதரர்களின் சிறப்பான பங்களிப்புக்காகவும் அதைச் சிறந்த முறையில் பரப்புவதற்காகவும் இவர்களுக்கு 6-வது இந்திரா சிவசைலம் அறக்கொடை பதக்கம் வழங்கப் படுகிறது. டாஃபே நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மல்லிகா னிவாசனின் அன்னை இந்திரா சிவசைலம் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.

புகழ்பெற்ற இசை விமர்சகர் சுப்புடுவால் `இரட்டைக் குழல் துப்பாக்கி’ என்று பாராட்டப்பட்ட மல்லாடி சகோதரர்களைச் சந்தித்து பேசியதிலிருந்து:

பாடுபவர்களில் பாம்பே சிஸ்டர்ஸ், மாம்பலம் சிஸ்டர்ஸ் என்று சகோதரிகளே அதிகம். சகோதரர்களுக்கு ஏன் பஞ்சம்?

சேர்ந்து பாடுவதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இருவருமே ஒரே நேரத்தில் சாதகம் செய்ய வேண்டும். இதுபோன்ற காரணங்கள் இருக்கலாம்.

இதுதான் எங்களின் பாணி என்று நீங்கள் பெருமையாக நினைப்பது எதை?

இசைக் குடும்பத்திலிருந்து நாங்கள் வந்திருந்தாலும், நேதுநூரி கிருஷ்ணமூர்த்தியிடம் இசை கற்றுக்கொண்டாலும் எங்களின் கமக சம்பிரதாய பாணி, டாக்டர் பாத பினாகபாணியின் தொடர்ச்சிதான்.

இசைக்கு மொழி எந்தளவுக்கு தேவைப்படும்?

சங்கீதம், சாகித்யம் இரண்டுக்குமே சரிபாதி முக்கியத்துவம் இருந்தால்தான் முழுமை கிடைக்கும்.

தமிழ்நாட்டில் ஒரே ஒரு துக்கடாவாகக் கூட தமிழ்ப் பாட்டைப் பாடாமல் ஒருவர் கச்சேரியை வெற்றிகரமாக நடத்திவிட முடியும். அந்தளவுக்குப் பெருந்தன்மை உள்ளவர்கள் தமிழ் ரசிகர்கள். இந்தப் பெருந்தன்மை மற்ற மாநிலத்து ரசிகர்களுக்கு ஏன் இருப்பதில்லை என்று நீங்கள் நினைத்ததுண்டா?

எந்த இடத்தில் கச்சேரி செய்கிறோமோ அந்த மாநிலத்தின் மொழியில் சில பாடல்களையாவது பாடுவதுதான் தர்மம். ஆனால் கேரளம் போன்ற சில மாநிலங்களில் இதற்கு விதிவிலக்கு உண்டு. காரணம் பிராந்திய மொழியில் சில இடங்களில் சாகித்யங்களே இருக்காது. எங்களைப் பொறுத்தவரையில் பாபநாசம் சிவன், கோபால கிருஷ்ண பாரதி ஆகியோரின் பாடல்களைப் பாடுகிறோம்.

மெல்லிசையில் உங்களைக் கவர்ந்த இந்திய இசை அமைப்பாளர்கள் யார்?

எம்.எஸ்.வி., நவுஷத், எஸ்.டி.பர்மன், நய்யார் ஆகியோரின் இசை பிடிக்கும்.

கர்னாடக இசை எல்லாருக்குமான இசையாக எப்போது மாறும்?

கர்னாடக இசையில் வேறு உணர்ச்சிகளைப் பாடினால் சோபிக்காது. இதுபோல் ஒரு கேள்வி, மகாராஜபுரம் விஸ்வநாதய்யரிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவரின் பதில்: ரயிலில் ஏசி பெட்டி ஒன்றுதானே இருக்கும். அதுதான் கர்னாடக இசை என்றாராம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in