ப்ரியாமணியுடன் துணிச்சலான கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுன் 

ப்ரியாமணியுடன் துணிச்சலான கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுன் 
Updated on
1 min read

நடிகை ப்ரியாமணி நடிக்கும் 'கொடேஷன் கேங்' திரைப்படத்தில் சாரா அர்ஜுன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் 'பாக்ஸர்' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விவேக். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா நெருக்கடியால் தடைபட்டுள்ளது. அடுத்த வருடம் 'பாக்ஸர்' படப்பிடிப்புத் தொடங்கும் என்று தெரிகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் ப்ரியாமணி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கொடேஷன் கேங்' என்கிற கேங்ஸ்டர் திரைப்படத்தை விவேக் இயக்குகிறார். மும்பையில் நிழலுலகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இந்த கதையில் சாரா அர்ஜுனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சாராவின் கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசியிருக்கும் இயக்குநர் விவேக், "சாரா குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்திருக்கிறார். இது பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய ஒரு கேங்ஸ்டர் திரைப்படம். இதில் சாரா மிகவும் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தீவிரமாகப் பழிவாங்கத் துடிக்கும் ஒரு கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் சாரா நடிக்கிறார்.

அவரது திரை வாழ்க்கையில் இது அவருக்கு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். அவர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்க யோசிப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் தைரியமாக ஒப்புக்கொண்டார். நாயகி ப்ரியாமணியுடன் ஒரு முழு நீளக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மும்பையில் படத்தின் படப்பிடிப்பைத் துவங்கவிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

'தெய்வத்திருமகள்', 'சைவம்' ஆகிய படங்கள் மூலம் பிரபலமான சாரா சமீபத்தில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் 'சில்லுக் கருப்பட்டி' திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in