லாஸ்லியாவுக்கு உதவ அனைவரும் தயாராக இருக்கிறோம்: வனிதா விஜயகுமார்

லாஸ்லியாவுக்கு உதவ அனைவரும் தயாராக இருக்கிறோம்: வனிதா விஜயகுமார்
Updated on
1 min read

லாஸ்லியாவுக்கு உதவ பிக் பாஸ்-3 போட்டியாளர்கள் அனைவரும் தயாராக இருப்பதாக நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

பிக் பாஸ் 3-வது சீஸனில் பிரபலமான போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இவர் விளம்பரப் படங்கள், திரைப்படங்கள் எனத் தற்போது நடித்து வருகிறார். தனது தந்தை மரியநேசன், கனடா நாட்டில் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாகவும் தனக்குத் தன் தந்தையை மிகவும் பிடிக்கும் என்றும் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல முறை கூறினார்.

இந்நிலையில் கனடாவில் இருந்த மரியநேசன், நேற்று பின்னிரவு மாரடைப்பின் காரணமாக திடீர் மரணமடைந்தார். அவரது உடல் கனடாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட இருந்தது. ஆனால், கரோனா நெருக்கடி காரணமாக விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் இதில் சிக்கல் நிலவுகிறது. லாஸ்லியாவும் உடனடியாக இலங்கைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், பிக் பாஸ்-3 நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரான வனிதா விஜயகுமாரிடம், லாஸ்லியா குறித்து அவரது ரசிகர்கள் பலர் ட்விட்டரில் கேட்க ஆரம்பித்தனர்.

இதற்கு வனிதா அளித்த பதில்:

"லாஸ்லியாவின் தந்தை மரணம் குறித்துக் கேள்விப்பட்டதும் மிகவும் சோகமாக இருக்கிறோம். அவர்கள் இதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்தான் வீட்டில் சம்பாதித்துக் கொண்டிருந்தவர். மிகவும் வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கை முற்றிலும் ஊகிக்க முடியாதபடி இருக்கிறது. பயமாக இருக்கிறது. அவரது உடலையாவது நேரத்துக்குக் கொண்டு வர முடியும் என நம்புகிறேன்.

நான் லாஸ்லியாவிடம் பேசினேன். அவர் உடைந்து போயிருக்கிறார், அழுது கொண்டிருந்தார். ஆனால் கண்டிப்பாக அவர் வலிமையாக இருப்பார். இலங்கைக்குச் செல்ல முயன்று கொண்டிருக்கிறார். தூதரகம் வழியாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். விஜய் டிவி நிர்வாகம் அவருக்கு உதவி வருகிறது. கரோனா பிரச்சினை காரணமாக உடனடியாக மரியநேசனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர முடியவில்லை. லாஸ்லியாவுக்கு என் அன்பையும், ஆசீர்வாதங்களையும் தந்திருக்கிறேன்.

இப்போதுதான் அபிராமி உள்ளிட்ட இன்னும் சில பிக் பாஸ்-3 போட்டியாளர்களிடம் பேசினேன். அனைவரும் லாஸ்லியாவுடன் தொடர்பில் இருக்கிறோம். அவரது இந்தப் பயணச் சிக்கலைச் சரிசெய்ய எங்கள் உதவியையும், ஆதரவையும் தருகிறோம். ஏதாவது நடக்கும் என நம்புகிறேன். இறைவன் அவரோடு இருக்கட்டும்".

இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in