

சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்துக்கு 'கொற்றவை' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.
'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி', 'அட்டகத்தி', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். மேலும், 'மாயவன்' மற்றும் 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
தற்போது '4ஜி', 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். மீண்டும் படம் இயக்குவதற்கு ஆயத்தமாகி வந்தார் சி.வி.குமார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
தற்போது சி.வி.குமார் இயக்கவுள்ள படத்துக்கு 'கொற்றவை' என தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதில் ராஜேஷ் கனகசபை, டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரகாஷ் ருத்ரா, எடிட்டராக அஸ்வின் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சென்னை, காரைக்குடி, பெரம்பலூர், கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.