சிவா - யோகி பாபு இணையும் சலூன்
சிவா - யோகி பாபு இணைந்து நடிக்கவுள்ள படத்துக்கு 'சலூன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான படம் 'தர்மபிரபு'. கடந்தாண்டு ஜூன் 28-ம் தேதி வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முத்துக்குமரன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முத்துக்குமரனின் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 'சலூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தலைப்பு கீழே 'எல்லா மயிறும் ஒண்ணுதான்' என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு.
இந்தர் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக மணிகண்டன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ஷான் லோகேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படம் தொடர்பான அறிவிக்கப்பட்டுள்ள போஸ்டர் வடிவமைப்பு மற்றும் தலைப்பின் மூலம் சலூன் கடைகளில் நடக்கும் காமெடியை முன்வைத்து படம் உருவாகவுள்ளது தெளிவாகிறது. இதர நடிகர்கள் தேர்வு முடிந்தவுடன் படப்பிடிப்புக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.
