

'மாஸ்டர்' திரைப்படத்தின் டீஸர் தீபாவளி முதல் திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் 'மாஸ்டர்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து 'மாஸ்டர்' பின்வாங்கியது.
பாடல்கள் வெளியாகிவிட்டாலும், டீஸர் உள்ளிட்ட எதையுமே படக்குழு வெளியிடவில்லை. பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளிக்கு டீஸரை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், திரையரங்குகள் திறக்கப்பட்டு இருப்பதால் தீபாவளிப் பரிசாக, இந்த டீஸர் திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மாலை 6 மணிக்கு சன் டிவியின் யூடியூப் தளத்திலும், 6.30 மணி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி திரையரங்குகளிலும் டீஸர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'மாஸ்டர்' வெளியாகும் எனத் தெரிகிறது.