

அரசியல் கட்சி பதிவு செய்து, எஸ்.ஏ.சந்திரசேகர் நியமித்த அனைத்து நிர்வாகிகளையும் நீக்கிவிட்டு, தமிழகம் உட்பட அனைத்து இடங்களிலும் புதிய நிர்வாகிகளை விஜய்நியமித்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்தின்வெளியீட்டுக்கு பிறகு அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் தந்தையும்,இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ‘அகில இந்திய தளபதி விஜய்மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் சமீபத்தில் அரசியல் கட்சியை பதிவுசெய்தார். அதற்கு நிர்வாகிகளையும் நியமித்தார். ‘‘எனக்கும் அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேரக் கூடாது’’ என்று விஜய் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் எஸ்ஏசி நியமித்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தனது அகில இந்திய தலைமை தளபதி விஜய்மக்கள் இயக்கத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியைவிஜய் தீவிரப்படுத்தினார். தமிழகம்மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கும் பணியை விஜய் தற்போது முடித்துள்ளார். தன் பெயர்,புகைப்படம், கட்சிக் கொடி உள்ளிட்ட எதையும் மற்ற (எஸ்ஏசிஆதரவு) நிர்வாகிகள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுமாறு புதிய நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
எஸ்ஏசி தரப்பில் இருந்து உருவாகும் பிரச்சினைகளை எதிர்கொள்ளதனியாக ஒரு குழுவை நியமித்துள்ளார். எஸ்ஏசி ஆதரவாளர்களின் செயல்பாடுகளை இக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
கட்சி தலைவர் மீது மோசடி புகார்
அரசியல் கட்சியை பதிவு செய்தஎஸ்ஏசி, அக்கட்சியின் மாநிலத் தலைவராக விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த ஆர்.கே.ராஜா என்ற பத்மநாபனை நியமித்தார். எஸ்ஏசியின் கட்சியில் தன் ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது என்று விஜய் கண்டிப்புடன் கூறியதையும் மீறி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்துக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் எஸ்ஏசியுடன் இணைந்து பத்மநாபன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சில நாட்களுக்குமுன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையும், நடிகர் விஜய் படத்தையும் அனுமதியின்றி சிலர் பயன்படுத்தி வருவதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்தனர். இந்நிலையில், பத்மநாபனின் மனைவி சுஜாதா, மாமனார் சுபாஷ், மைத்துனர் சுகுமார் ஆகிய 3 பேரையும் திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியபோது, ‘‘சுந்தரவடிவேல் என்பவர் அளித்த மோசடி புகார் உட்படபத்மநாபன் மீது 3 புகார்கள் வந்துள்ளன. நில மோசடி தொடர்பான புகார்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான விசாரணைக்கு வராமல் பத்மநாபன் தலைமறைவாகிவிட்டதால், அவரது மனைவி உள்ளிட்டோரை வரவழைத்து விசாரிக்கிறோம். புகார்களில் மனைவி உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது’’ என்றனர். பத்மநாபனின் மனைவி சுஜாதாவை மட்டும் போலீஸார் நேற்று பிற்பகலில் விடுவித்தனர்.
இதன் பின்னணியில் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இருப்பதாக கூறப்படுகிறது.
பத்மநாபனின் வழக்கறிஞர் கிஷோர்குமார், ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் கூறியபோது, ‘‘விஜய்மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தூண்டுதலாலேயே பத்மநாபன் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். அவரது தூண்டுதலாலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்ஏசி - விஜய் கருத்து மோதலால், 25 ஆண்டுகளாக உழைத்த ரசிகர் பாதிக்கப்பட்டுள்ளார். விஜய், தனதுமவுனத்தை கலைத்து பத்மநாபனை காப்பாற்ற வேண்டும். வழக்கை வாபஸ் பெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.
இந்த சூழலில், வரும் தீபாவளிஅன்று தனது ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘டீஸர்’ அறிவிப்பை முடித்து, நல்லபடியாக படத்தை வெளியிடும் வேலைகள் நடக்க வேண்டும். அதன்பிறகே அரசியல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவது என்பதில் விஜய் தெளிவாக உள்ளார்.