Last Updated : 12 Nov, 2020 12:55 AM

Published : 12 Nov 2020 12:55 AM
Last Updated : 12 Nov 2020 12:55 AM

முதல் பார்வை: சூரரைப் போற்று

ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையே 'சூரரைப் போற்று'.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அப்பா ஆறுவிரல் வாத்தியார் (பூ ராமு) மனு எழுதிப் போட்டு மின்சார வசதி உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுபவர். அவரின் அஹிம்சா வழி மனுவால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், போராட்டத்தால் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் அவரின் மகன் சூர்யா. இது அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் மோதல் வலுக்க, சூர்யா தேசிய பாதுகாப்பு அகாடமியில் விமானப் படை அதிகாரியாகத் தேர்வாகிச் செல்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்புகிறார்.

தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், உழைக்கும் தொழிலாளர்கள், ஏர் ஓட்டும் விவசாயிகள், விமானத்தில் பறப்பதையே பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை, ஆசையை நிறைவேற்றும் விதமாக 1000 ரூபாயில் ஏன் 1 ரூபாயில் கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்கப் போராடுகிறார். இதற்காக விமான சேவை நிறுவன அதிபரிடம் உதவி கேட்கிறார். அவரோ உதாசீனப்படுத்துகிறார். மத்திய அரசு அலுவலகங்கள், ஏவியேஷன் அகாடமி என எல்லா இடங்களிலும் அலைக்கழிக்கப்படுகிறார். லைசென்ஸ் சிக்கல், பெரும் பணக்கார விமான சேவை நிறுவன அதிபர்களின் சூழ்ச்சி, நம்பிக்கைத் துரோகம், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் விரிசல், கடன் பிரச்சினை என அடுத்தடுத்து அதிகமான நெருக்கடிகளைச் சந்திக்கிறார். அவரின் கனவு எப்படி நனவானது, ஏழை மக்களுக்கு மிக மிகக் குறைந்த விலையில் விமானப் பயணம் எப்படிச் சாத்தியமானது என்பதை உயிரோட்டத்துடன் சொல்வதே 'சூரரைப் போற்று' படத்தின் திரைக்கதை.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய 'சிம்பிள் ஃப்ளை' நூலை அடிப்படையாகக் கொண்டும் 'சூரரைப் போற்று' படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் ஷாலினி உஷாதேவியுடன் திரைக்கதை அமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். படத்தின் மேக்கிங்கில் கச்சிதத்தைக் கொண்டுவந்துள்ளார். அதுவும் அவரின் கதாபாத்திரக் கட்டமைப்புகள் ஆஸம். கிட்டத்தட்ட எல்லா நடிகர்களையும் மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். ஹீரோயிசப் படத்தில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் விதம் வெல்டன். யாருக்குமே லேசுபாசான கேரக்டர் இல்லை. அத்தனை பேரும் தங்கள் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

கொடுமை கண்டு பொங்கி எழுந்து பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசும் சூர்யாவைப் படத்தின் ஒரு பிரேமிலும் பார்க்கமுடியாது. கையில் அருவா, வேல் கம்பு, கத்தி, துப்பாக்கி என எதுவும் கிடையாது. நான் இதைச் சொல்லியே ஆகணும் என்று ரொமான்ஸிலும் ஒரே மாதிரியான சூர்யாவைப் பார்க்க முடியாது. ஹரி வெர்ஷனாகவும், கௌதம் மேனன் வெர்ஷனாகவும் இல்லாமல் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கமாக ராஜபாட்டையில் நடந்திருக்கிறார். நடித்திருக்கிறார். அழுதுகொண்டே தன் இயலாமையை, ஆற்றாமையை, கையறு நிலையை வெளிப்படுத்தும் சூர்யாவைப் பார்க்க முடிகிறது. ஆனால், சின்னதாய் புன்னகையைக் கூடச் சிந்தாத அளவுக்கு சிரிப்பென்றாலே என்ன என்று தெரியாத, கதாபாத்திரத்துடன் ஒன்றிய சூர்யாவைப் பார்ப்பது புதிதாக உள்ளது. இதுவரை சூர்யா நடித்த எந்தப் படத்தின் நடிப்புச் சாயலும் இதில் இல்லை. அழுத்தமாக தன் நடிப்பில் தடம் பதித்து இதயத்தைத் தொடுகிறார்.

அப்பாவுக்கு நேர்ந்ததை உணர்ந்து ஊருக்கு வர முடியாமல் விமானக் கட்டணத்துக்கு வழியில்லாமல் அங்கு இருப்பவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பிச்சையாகக் கேட்கும்போதும், ஊருக்கு வந்து அம்மாவைப் பார்த்த கணத்தில் அழுது தன் நிலையை விளக்கும்போதும் கண்ணீரில் நனைய வைக்கிறார்.

ஒரு முன்னணி நட்சத்திர நடிகர் ஓடிடியில் படத்தை வெளியிடுவது துணிச்சல் என்றால், அதிலும் பரிசோதனை முயற்சிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்திருப்பது வேற லெவல். சூர்யாவின் இந்த முயற்சிகள் என்றும் தொடர வேண்டும் என்று வாழ்த்துவோம். வரவேற்போம்.

அபர்ணா பாலமுரளி, கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து அட்டகாசமான நடிப்பை நல்கியுள்ளார். அவர் திருமணத்துக்குப் போடும் கண்டிஷன்கள், சூர்யா உடனான உரசலுக்குப் பிறகான நடவடிக்கை, ரூ.16 கோடி டீலை சூர்யா புறக்கணித்ததற்கான ரியாக்‌ஷன் என பக்குவமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரின் கதாபாத்திரத் தன்மைக்கு அந்தக் கண்கள் பெரிய பிளஸ்.

சுதா கொங்கரா அளவுக்கு யாரும் காளி வெங்கட்டை அவ்வளவு சரியாகப் பயன்படுத்துவதில்லையோ என்னவோ. இறுதிச்சுற்றில் ரித்த்கா சிங்கின் தந்தையாக நடித்தவர், இதில் சூர்யாவின் நண்பனாக மனதில் இடம் பிடிக்கிறார். கருணாஸின் வெள்ளந்தி மனசால், பளிச் நடிப்பால் பசை போல் ஒட்டிக் கொள்கிறார். 'உன்னை நம்பி இருக்கோம்டா. ஜெயிச்சிருடா' என்று சொல்லும் ஊர்வசியின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். மகனின் தாமத வருகையை அவர் கண்ணீரும் கம்பலையுமாக கரித்துக் கொட்டும் விதம் தேர்ந்த நடிகையின் உச்சம். 'பூ' ராமு மகன் மீதான பாசத்தை அப்படியே கடத்தியிருக்கிறார்.

சூர்யாவின் உற்ற நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள். மோகன்பாபு ஆச்சர்ய மறுவரவு. வினோதினி வைத்தியநாதன், பரேஷ் ராவல், அச்யுத்குமார், ஆர்.எஸ்.சிவாஜி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோர் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பில் மிளிர்கிறார்கள்.

நிகேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது. டெல்லி, மதுரை, விமானங்களின் ஓட்டம் என்று சுற்றிச் சுழன்று விதவிதமான கோணங்களில் ஈர்க்கிறார். ஜி.வி.பிரகாஷின் இசையில் பருந்தாகுது ஊர்க்குருவி என்ற மாறா தீம் செம்ம. காட்டுப்பயலே காதலின் ராகம் என்றால், மண்ணுருண்ட மேல தத்துவத்தில் ததும்பி நிற்கிறது. ஏகாதசியின் பாடல் வரிகளும், செந்தில் கணேஷின் குரலும் மண்ணுருண்ட மேல பாடலுக்கு இன்னும் அதிக அர்த்தங்களைக் கொடுத்துள்ளன. கதையோட்டத்துக்குத் தகுந்தபடி பின்னணி இசையில் பிரகாசிக்கிறார் ஜி.வி. சதீஷ் சூர்யாவின் கட்ஸில் நேர்த்தி.

உண்மைக் கதையில், ஜி.ஆர்.கோபிநாத் தன் நிறுவனத்தை கிங்ஃபிஷர் மல்லையாவுடன் இணைத்தார். ஆனால், திரைப்படத்தில் அப்படி இல்லாதது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. திரைக்கதை சுதந்திரம் எனும் விதிப்படி, ஷாலினி உஷாதேவியும், சுதா கொங்கராவும் மல்லையாவுக்குப் பதில் ஒரு பாலய்யாவைக் காட்டுகிறார்கள். ஆனால், அந்த டீல் வேறு மாதிரி அமைத்திருப்பது படத்துக்கு பாசிட்டிவ் பலம் சேர்க்கிறது.

''ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை''. ''நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ். பேசாம ஊருக்குப் போய் மாடு மேய்க்கிற வேலையைப் பாரு'' என்ற அலைக்கழிப்புகளை, புறக்கணிப்புகளை, ஏமாற்றங்களை ஒவ்வொன்றாய்ச் சொல்லி அடுத்தகட்டத்துக்கு சூர்யா நகரும் விதத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் எமோஷனல் கலந்து சொன்ன விதம் எடுபடுகிறது. உயர்ந்தவன் தாழ்ந்தவன், பிசினஸ் கிளாஸ் டிக்கெட் உள்ளிட்ட ஏற்றத்தாழ்வுகளைக் களையும் பொருட்டு சமூக அக்கறையுடன் சொன்ன விதம் பாராட்டுக்குரியது.

குடியரசுத் தலைவரை அப்படி அசால்ட்டாகச் சந்திக்க முடியுமா, விமானத்தை அசாதாரணமாக ராணுவப் பயிற்சி மையத்தில் அத்துமீறித் தரையிறக்க முடியுமா, தொழிலதிபர்களுக்காக அரசு அதிகாரிகள் அவ்வளவு ரிஸ்க் எடுப்பார்களா போன்ற கேள்விகளும், செயற்கையான சில சினிமாத்தனங்களும் படத்தில் இருப்பதை மறுக்கமுடியாது. அதேசமயம் அதையே பெருங்குறையாகச் சொல்லிவிடவும் முடியாது.

மொத்தத்தில், சூரரை மட்டுமல்ல, பரிசோதனை முயற்சிக்காக சூர்யாவையும், மேக்கிங் மூளைக்காக சுதா கொங்கராவையும் போற்றலாம்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x