சூரியின் நில ஒப்பந்தத்தில் எங்களுக்குச் சம்பந்தமில்லை; நீதி நிலைநாட்டப்படும்: விஷ்ணு விஷால்
சூரி மற்றும் தயாரிப்பாளர் அன்புவேலனுக்கு இடையே நடந்த நில ஒப்பந்தத்தில் எங்கள் தரப்பிலிருந்து யாரும் சம்பந்தப்படவில்லை என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கில் பணம் பெற்று, நிலம் விற்பதாகக் கூறி மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் பேரில், தான் கைது செய்யப்படாமல் இருக்க விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வுபெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இருந்தார். திடீரென்று நேற்று (நவம்பர் 9) தனது முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.
தமிழ்த் திரையுலகினர் மத்தியில் சூரியின் புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. மேலும், அவ்வப்போது சூரியை மறைமுகமாகச் சாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டார் விஷ்ணு விஷால்.
தற்போது ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற நிலையில், விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"முன்ஜாமீன் மனுவை எனது அப்பா திரும்பப் பெற்றுக்கொண்டார். சூரி மற்றும் தயாரிப்பாளர் அன்புவேலனுக்கு இடையே நடந்த நில ஒப்பந்தத்தில் எங்கள் தரப்பிலிருந்து யாரும் சம்பந்தப்படவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை, தமிழக முதல்வர் மற்றும் தமிழகக் காவல்துறை ஆகியவற்றின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நீதி நிலைநாட்டப்படும்".
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
