

'விக்ரம்' தலைப்புக்கான அறிவிப்பை டீஸராக ஷூட் செய்ததின் பின்னணி குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படத்துக்கு 'விக்ரம்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. டீஸர் ஒன்றை ஷூட் செய்து படத்தின் தலைப்பை வெளியிட்டனர். இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கமல் ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் 'விக்ரம்' படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் 'விக்ரம்' டீஸர் அறிமுக விழா நடைபெற்றது.
அதில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:
"படத்தில் தலைப்பு குறித்த அறிவிப்பை எப்படி வெளியிடுவது என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, வெறும் போஸ்டராக வெளியிடாமல் ஆக்கபூர்வமாக வேறு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தோம். பிறகு இதற்காக ஒரு தனி டீஸரே ஷூட் செய்யலாம் என்று கமல் சாரிடம் சொன்னேன்.
கரோனா அச்சுறுத்தலால் அப்போது மிகவும் தயக்கத்துடனே சொன்னேன். நான் இந்த யோசனையைச் சொன்னதுமே கமல் சார் மிகவும் மகிழ்ச்சியடைந்து, தன்னுடைய மற்ற பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வந்து நடித்துக் கொடுத்தார். அதுமட்டுமின்றி அவரது பிறந்த நாளுக்கு அவருக்கு என்ன அன்பளிப்பு கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இதைவிடச் சிறந்த அன்பளிப்பையும் எங்களால் கொடுத்திருக்க முடியுமா என்று எங்களுக்குத் தெரியவில்லை".
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.