

நீதிமன்ற வழக்கில் இருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேண்டாம் என்று தஞ்சை பகுதி கிராம மக்கள், நடிகர் சிரஞ்சீவிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ராஜகிரி எனப்படும் இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர்(25). இவர் இயக்கிய ‘தாகபூமி’ குறும்படத்தின் கதையைத் தழுவி, நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டதாக தஞ்சை நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.
திரைப்பட இயக்குநர் முருக தாஸ், தயாரிப்பாளர்கள் கருணா கரன், சுபாஷ்கரன், ஒளிப்பதி வாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், நடிகர் விஜய் உள்ளிட்டோர் மீது தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
மேலும், கத்தி படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வதற்கு தடை கேட்டும் 4 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ‘கத்தி’ திரைப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக செய்தி வெளியானதை யடுத்து, இளங்காடு, திருக்காட்டுப்பள்ளி, ஒன்பத்து வேலி, புதகிரி, கூடநாணல், விண்ணமங்கலம், கள்ளப் பெரம்பூர், கச்சமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர், வழக்கு தொடர்பான விவரத்தை தெரிவித்து நடிகர் சிரஞ்சீவிக்கு கடந்த சில நாட்களாக கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.
மேலும், இயக்குநர் முருக தாஸுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் முழுவதும் ‘கையெ ழுத்து இயக்கம்’ தொடங்க உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.