கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் மெகா படம்

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் மெகா படம்
Updated on
1 min read

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், அல்லு அர்ஜுன், புனீத் ராஜ்குமார், ஃபகத் ஃபாசில் இணையும் மெகா படம் ஒன்று தயாராக இருக்கிறது.

இயக்குநர் கெளதம் மேனன் அடுத்தாக கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இருவரும் நடிக்கவுள்ளனர். எனவே இந்தப் படம் 4 தென்னிந்திய மொழிகளிலும் தயாராகும் என்று தெரிகிறது.

தமிழில் சிம்பு, தெலுங்கில் நாக சைதன்யா நடிக்க, ஒரே நேரத்தில் 'அச்சம் என்பது மடமையாடா' படத்தை கெளதம் மேனன் இயக்கிவருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னரே புனீத் ராஜ்குமாருடன் இணைய திட்டமிட்டிருந்த கெளதம் மேனன், 7-அப் விளம்பர படப்பிடிப்பின்போது அவரை சந்தித்து பேசி சம்மதம் பெற்றுள்ளார். புனீத் ராஜ்குமாரும் கவுதம் மேனனுடன் இணைய ஆவலாக இருந்ததால், அவர் தற்போது அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு, தேதிகளை ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதேபோல ஃபகத் ஃபாசிலும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருந்தார். அவரது ஆசையும் நிறைவேற உள்ளது..

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும், தமிழிலிருந்து சிலம்பரசனும் இந்தப் படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்கள் இயக்கி பழக்கப்பட்டுள்ள கெளதம் மேனன், இந்தப் படத்தின் தமிழ் மற்றும் மலையாளம் பதிப்புகளை தயாரிப்பார் என்றும், புனீத் கன்னட பதிப்பையும், முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தெலுங்கு பதிப்பையும் தயாரிப்பார்கள் என்றும் தெரிகிறது. இந்தப் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை கெளதம் மேனன் சந்திக்கவுள்ளார்.

ராம் சரண் தேஜாவுடன் இணைந்து மற்றொரு தெலுங்கு படத்தையும் கெளதம் மேனன் இயக்கவுள்ளார். 'தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள ராம் சரண், அது முடிந்ததும் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதல் கெளதம் மேனன் படத்தைத் தொடங்குவார். இடைப்பட்ட நேரத்தில் இந்த பன்மொழிப் படத்தை துவங்க திட்டமிட்டுள்ள கெளதம் மேனன், அது உடனடியாக நடக்கவில்லையென்றால், ராம் சரணையும் இந்த பன்மொழிப் படத்தில் நடிக்கவைப்பார் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in