

'அரண்மனை' படத்தின் கதை விவாதத்தின் போது, 'ராஜா ராணி' படம் வெளிவந்ததால் தனது படத்தில் மாற்றங்கள் செய்திருக்கிறார் சுந்தர்.சி
'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தை முடித்துவிட்டு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் சுந்தர்.சி. அப்போது தான் ஒரு பேய் படத்தை இயக்கலாம் என்று 'அரண்மனை' கதையை எழுதினார்.
அதற்கான நடிகர்கள், நடிகைகளை ஒப்பந்தம் செய்து வந்தார். 'பாஸ் (எ) பாஸ்கரன்' கூட்டணியான ஆர்யா, நயன்தாரா இருவரையும் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து இருவரிடமும் பேசிவிட்டார்.
'அரண்மனை'யில் சுந்தர்.சி நடித்த பாத்திரத்தில் ஆர்யாவும், ஆண்ட்ரியா நடித்த பாத்திரத்தில் நயன்தாராவும் நடிப்பது என முடிவானது. அச்சமயத்தில் தான் 'ராஜா ராணி' படத்தில் ஆர்யா, நயன்தாரா இருவரும் கணவன், மனைவி பாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஆனால், 'அரண்மனை' கதைப்படி இருவருமே அண்ணன், தங்கையாக இருப்பதாக எழுதியிருந்தார் சுந்தர்.சி.
'ராஜா ராணி' படத்தைத் தொடர்ந்து 'அரண்மனை' படத்தில் அண்ணன், தங்கை என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனக் கருதி, தானே நடிப்பது என உறுதி செய்து, தங்கையாக ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்தார்.
'அரண்மனை' முதலில் அமைந்த படக்குழுவின்படி நயன்தாரா ஆர்யாவை 'அண்ணா' என்று அழைத்திருப்பார். ஆனால், அது நடக்கவில்லை!
முந்தைய பாகம்: >அறுந்த ரீலு 14: 'யோகா'வில் பாலாவை வியக்கவைத்த ஆர்யா