தந்தையின் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; அதில் என் ரசிகர்கள் இணைய வேண்டாம்; என் பெயரைப் பயன்படுத்தினால் நடவடிக்கை: விஜய்

தந்தையின் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; அதில் என் ரசிகர்கள் இணைய வேண்டாம்; என் பெயரைப் பயன்படுத்தினால் நடவடிக்கை: விஜய்
Updated on
1 min read

தந்தையின் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்ற செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியானது. கட்சிப் பதிவு மனுவில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விஜய் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என்று பலரும் கருதி வரும் வேளையில், தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பதிவை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி செய்திருக்கிறார். இதனை அவரே பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சில மாதங்களில் விஜய் இதன் தலைவராக அறிவிக்கப்படுவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தந்தையின் கட்சிப் பதிவுக்கு எதிராக விஜய் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் விஜய் கூறியிருப்பதாவது:

"இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் ஓா் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். மேலும், எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சிப் பணியாற்றவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in