பீட்டர் பாலுடன் சமரசமா?- வனிதா விஜயகுமார் விளக்கம்

பீட்டர் பாலுடன் சமரசமா?- வனிதா விஜயகுமார் விளக்கம்
Updated on
1 min read

தனது முன்னாள் கணவர் பீட்டர் பாலுடன் எந்தவிதமான சமரசமும் செய்யவில்லை என்று நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

கரோனா ஊரடங்கு சமயத்தில் கடும் சர்ச்சைக்கு இடையே பீட்டர் பாலை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். இது தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. தற்போது வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் இருவருக்கும் பிரச்சினை எனவும் பிரிந்துவிட்டார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து வனிதா, தான் பீட்டர் பாலை விட்டுப் பிரிந்து விட்டதாகவும், அதற்கான காரணம் என்னவென்றும் நீண்ட காணொலி ஒன்றில் பேசிப் பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் வனிதா மீண்டும் பீட்டர் பாலுடன் இணைய முயன்றதாகவும் ஆனால் அதை பீட்டர் பால் ஏற்கவில்லை என்பது போலவும் சில செய்திகள் வந்தன.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் வனிதா விளக்கம் அளித்துள்ளார்.

"என் நல விரும்பிகள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயல்வதாகவும் ஆனால் நிராகரிக்கப்பட்டதாகவும் சில ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. தயவுசெய்து இதுபோன்ற மாயைகளிலிருந்து வெளியே வாருங்கள். ஏனென்றால் என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன்.

இதற்கு முன் நான் என் உறவுகளைச் சரிசெய்ய என்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்திருக்கிறேன், பல அபத்தங்களைப் பொறுத்திருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு பொறுக்க முடியாமல் போனதால்தான் நான் அந்த உறவிலிருந்து வெளியேறினேன். என்னால் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ முடியாது. நான் அப்படிப்பட்டவள் கிடையாது. அதனால், தயவுசெய்து உங்கள் கற்பனைகளை நிறுத்துங்கள்.

உறவு முறிவைப் பற்றி நான் பதிவேற்றிய கடைசி வீடியோவுக்குப் பிறகு நாங்கள் இருவரும் பேசினோம். அவர் முதிர்ச்சியடைந்தவர். அவரது முடிவை அவர் எடுத்துவிட்டார். அந்த முடிவோடு என்னால் கண்டிப்பாக வாழ முடியாது. ஆனால், சொன்னதுபோல அவரது முன்னாள் மனைவி, குழந்தைகள் என் யாருமே அவர் வேண்டாம் என்று சொன்னதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எனவே இப்போது உங்களுக்கு உண்மை தெரியும். நான் முட்டாளாகவும், அப்பாவியாகவும், காதலில் மதிகெட்டும் இருந்ததால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.

காதலில் என் அதிர்ஷ்டம் என்ன என்பதை நான் புரிந்து ஏற்றுக்கொண்டு விட்டேன். எனது பணி, எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். எனவே, இதற்கு மேல் ஊகிப்பதை, விவாதிப்பதை நிறுத்துங்கள். அவரோட எனக்குச் சட்டரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ எந்த ஒரு உறவும் இல்லை. நான் இப்போது உணர்ச்சியற்றுப் போயிருக்கிறேன். நான் என் வழியில் என் வலியைக் கையாள்கிறேன்.

அத்தனை அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. நேர்மறைச் சிந்தனையுடன் என் பயணம் தொடரும். உங்கள் ஆசீர்வாதத்துடன் அது என்னைச் சிறந்த இடங்களுக்கு இட்டுச் செல்லும்".

இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in