

ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பெரும் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கொடுத்துவிட்டதால், 'ரஜினி முருகன்' விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடும் முயற்சியில் பலமுறை இறங்கியது. ஆனால், அந்நிறுவனம் வாங்கிய கடனால் படத்தை வெளியிட முடியாமல் திணறியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் திருப்பதி பிரதர்ஸ் இறங்கியது.
ஈராஸ் நிறுவனம் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கொடுத்தால் மட்டுமே 'ரஜினி முருகன்' படத்தை வெளியிட முடியும் என தெரிவித்து வந்தது. தற்போது, கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு பெரும் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் செலுத்திவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஈராஸ் நிறுவனமும் இப்படம் வெளியீட்டுக்கான தடையைத் தளர்த்திக் கொள்ள முன்வந்திருக்கிறது என்கிறார்கள். மற்ற பைனான்சியர்களிடம் திருப்பதி பிரதர்ஸ் தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. இப்பேச்சுவார்த்தை சுமுகமாக விரைவில் முடிய வாய்ப்பிருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
அனைத்து பிரச்சினைகளையும் முடித்து, தீபாவளி கழித்து நவம்பர் 27ம் தேதி இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட வாய்ப்பிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.