

விக்ரம் நடித்திருக்கும் '10 எண்றதுக்குள்ள' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். அக்டோபர் 21ம் தேதி படம் வெளியாகிறது.
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் '10 எண்றதுக்குள்ள'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
சென்னையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மிசோரம், ஒரிசா, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. இப்படத்தின் இறுதி காட்சியை ராஜஸ்தானில் சமீபத்தில் படமாக்கியது படக்குழு.
இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிவுற்று, சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டு காட்டினார்கள். அப்படத்தைப் பார்த்த சென்சார் குழு, படத்துக்கு 'யூ' சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படக்குழு அக்டோபர் 21ம் தேதி இப்படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறது. இப்படத்துக்கான திரையரங்க ஒப்பந்தங்கள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.