

முன்னணித் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் பாஜகவில் இணைந்துள்ளார்.
நயன்தாரா நடித்த 'அறம்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். அந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 'குலேபகாவலி', 'ஐரா', 'ஹீரோ', 'க/பெ ரணசிங்கம்' ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டது.
படங்கள் தயாரிப்பு மட்டுமன்றி, படங்களின் உரிமையை வாங்கியும் வெளியிட்டு வருகிறது. அஜித் நடித்த 'விஸ்வாசம்', சல்மான் கான் நடித்த 'தபாங் 3', 'தும்பா' உள்ளிட்ட படங்களை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டு வெற்றியும் கண்டது.
இந்நிலையில், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் ராஜேஷ் பாஜகவில் இணைந்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"இன்று பாஜகவில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. மாநிலத் தலைவர் முருகனின் அன்பான வரவேற்பில் மகிழ்ந்தேன். கட்சிக்காகவும், மாநிலத்தின், தேசத்தின் மக்களுக்காகவும் கடுமையாக உழைக்க, நரேந்திர மோடியின் வழிகாட்டுதலைப் பின்பற்ற ஆர்வத்துடன் இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும் கோருகிறேன்".
இவ்வாறு ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தற்போது இவருடைய தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்', 'அயலான்' உள்ளிட்ட பல படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.