

சிம்பு நடித்து வரும் 'ஈஸ்வரன்' படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டது.
பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். காட்சிகள் அனைத்துமே முடிந்துவிட்டன எனவும், சில நாட்களாகப் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்கள்.
உடனடியாகச் சென்னை திரும்பும் படக்குழு, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது. பொங்கல் வெளியீடு என்று அறிவித்துவிட்டதால், தீபாவளிக்கு டீஸரை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
'ஈஸ்வரன்' படப்பிடிப்பை முடித்துவிட்டு, சில கோயில்களுக்குப் பயணிக்கவுள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து நவம்பர் 9-ம் தேதி புதுச்சேரியில் தொடங்கும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இடையே சென்னை வரும் திட்டமெல்லாம் இல்லை என்கிறார்கள் சிம்புவுக்கு நெருக்கமானவர்கள்.