உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்: கனிகா

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்: கனிகா
Updated on
1 min read

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்று கனிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

'ஃபைவ் ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கனிகா. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். டப்பிங் கலைஞராகவும், பாடகியாகவும் கனிகா பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2008-ம் ஆண்டு ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்ற பொறியாளரைத் திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார் கனிகா. இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். குழந்தைப் பிறந்த பிறகும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார் கனிகா.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலமைப்பு, உடற்பயிற்சி உள்ளிட்டவை குறித்து கருத்துகள் தெரிவித்து வருபவர் கனிகா. தற்போது, அவருடைய பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து கனிகா கூறியிருப்பதாவது:

"உங்களில் பலரைப் போல நானும் எனது பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் எவ்வளவு ஒல்லியாக இருந்தேன், வயிறு எவ்வளவு தட்டையாக, தலைமுடி எவ்வளவு அழகாக இருந்தது என்பது போல சொல்லிக் கொண்டிருந்தேன்.

திடீரென ஒரு விஷயத்தை உணர்ந்தேன். நான் ஏன் அப்படிச் செய்தேன்? இப்போது எனது தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதாலா?

கண்டிப்பாக இல்லை.

ஏன் முன்னெப்போதையும் விட இப்போதுதான் என்னை நான் அதிகமாக நேசிக்கிறேன். அந்தத் தழும்புகள், அடையாளங்கள், பிழைகள் எல்லாவற்றுக்கும் ஒரு அழகான கதை இருப்பதாக நான் நம்புகிறேன்.

எல்லாமே கச்சிதமாக இருந்துவிட்டால் அதில் என்ன சுவாரசியம் இருந்துவிடப்போகிறது?

நம்மை ஏற்றுக்கொண்டு நம் உடலை விரும்புவது மிக மிக முக்கியமானது.

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்.

அனைவரின் கதைகளும் வித்தியாசமானது

தயவு செய்து உங்களைக் குறைவாக நினைப்பதை நிறுத்துங்கள்.

தயவு செய்து உங்கள் உடலை நேசியுங்கள்

யாராவது உங்கள் உருவத்தைக் கிண்டல் செய்தால் அவர்களை வாயடைக்கச் செய்துவிட்டு விலகிச் செல்லுங்கள்"

இவ்வாறு கனிகா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in