

தடைகளை எதிர்கொண்டு ‘கத்துக்குட்டி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:
உலகை வாழ வைக்கும் விவசாயிகளின் வாழ்வை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங் கள், ரியல் எஸ்டேட் வணிகர்கள், மீத்தேன் எரி வாயு திட்டம், வாட்டி வதைக்கும் அரசுகள் ஆகிய வற்றை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வு களைப் பிரதிபலிக்கும் வகையில் ‘கத்துக்குட்டி’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
வன்முறை, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் மதுவின் தீமைகளை இப்படம் சித்தரிக்கிறது. பசுமை குலுங்கும் நெல் வயல்கள், நெஞ்சை ஈர்க்கும் கிராமத்து வாழ்க்கை, விவசாய நிலங்களை அபகரிக்கும் ஆபத்து என இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் உள்ளத்தை கவர்கின்றன.
மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து என் போன்றோர் ஆயிரம் மேடைகளில் பேசுவதால் ஏற்படும் தாக்கத்தை இந்த ஒரு திரைப்படம் ஏற்படுத்துகிறது. இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர்கள், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இப்படத்தை பாராட்டியுள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் திட்டமிட்டபடி அக்டோபர் 1-ம் தேதி இந்த படத்தை திரையிட முடியவில்லை. தடைகளை எதிர்கொண்டு ‘கத்துக்குட்டி’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.